இந்தியாவில் தீ குறித்த வதந்தியால் ரயிலிலிருந்து குதித்து பரிதாபமாக 13 பேர் பலி
மகாராஷ்டிராவின் பச்சோரா எனுமிடத்துக்கு அருகே புதன்கிழமை (ஜனவரி 22) நடந்த ரயில் விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் பயணம் செய்த ரயிலில் தீ மூண்டதாகக் கிளம்பிய வதந்திக்கு அஞ்சி ரயிலை நிறுத்திக் கீழே குதித்தனர் என்றும் அந்தப் பாதையில் சென்ற மற்றொரு ரயில் அவர்கள் மீது மோதியதில் உயிரிழந்தனர் என்றும் அதிகாரிகள் கூறினர்.
லக்னோவிலிருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த புஷ்பக் விரைவு ரயில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் பச்சோராவுக்கு அருகே சென்றபோது தீ குறித்த வதந்தியால் ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்துச் சிலர் கீழே இறங்கினர்.அப்போது அந்தத் தடத்தில், பெங்களூரிலிருந்து டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த கர்நாடகா விரைவு ரயில் அவர்களை மோதியதாக இந்தியாவின் மத்திய ரயில்வே துறைப் பேச்சாளர் கூறினார்.
புஷ்பக் விரைவு ரயிலின் ஒரு பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் கூறுவதாக அவர் குறிப்பிட்டார். ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் ‘பிரேக்’ கருவியில் ஏற்பட்ட கோளாற்றால் அவ்வாறு தீப்பொறி உண்டாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தீப்பொறியைக் கண்டு பீதியடைந்த பயணிகள் சிலர் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதாகத் தெரிகிறது.உயிரிழந்த 13 பேரில் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.காயமடைந்த பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்ற பயணிகளை ஏற்றிச்செல்ல மாற்று ரயில் அனுப்பப்பட்டதாகவும் மத்திய ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
இந்த விபத்து மிகுந்த மனவேதனை அளிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், காயமடைந்தோர் விரைந்து நலம்பெற வேண்டுவதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டோருக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க அதிகாரிகளுக்குத் மோடி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், உலகப் பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொள்ள சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்குச் சென்றுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியை அவர் அறிவித்துள்ளார். காயமடைந்தோரின் சிகிச்சைக்கான மொத்தச் செலவையும் தமது அரசாங்கம் ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ரயில்வே வாரியத் தலைவருடனும் மற்ற அதிகாரிகளுடனும் தொடர்புகொண்டு விவரமறிந்ததாகவும் காயமடைந்தோருக்கு உடனடி சிகிச்சை வழங்க உத்தரவிட்டதாகவும் தகவல்கள் கூறின.