குழப்பமான கூட்டத்தொடருக்குப் பின்பு அயர்லாந்தின் பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தேர்வு
அயர்லாந்தில் கடந்த ஆண்டு நவம்பர் 29ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் உள்ள 174 தொகுதிகளில் மத்திய வலதுசாரி கட்சியான பியன்னா பெயில் கட்சி அதிகபட்சமாக 48 தொகுதிகளில் வென்றது. மற்றொரு மத்திய வலதுசாரி கட்சியான பைன் கேல் கட்சி 38 இடங்களைப் பிடித்தது. இடதுசாரி மையக் கட்சியான சின் பைன் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிகளும் பெரும்பான்மை பெறாததால், புதிய அரசு அமைவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக பியன்னா பெயில், பைன் கேல் கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடங்கின. இது, சமரசத்தில் முடிய, இந்தக் கூட்டணிக் கட்சிக்கு சில சுயேட்சைகளும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, அயர்லாந்தில் இந்தப் புதிய கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது. பிரதமராக பியன்னா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்ட்டின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கூட்டணி ஒப்பந்தப்படி, முதல் மூன்று ஆண்டுகளுக்கு மார்ட்டின் பிரதமராக பதவி வகிப்பார். பைன் கேல கட்சியின் சைமன் ஹாரிஸ் (தற்போதைய பிரதமர்) துணை பிரதமராக பதவி வகிப்பார். பின்னர் மீதமுள்ள ஆட்சிக்காலத்தில் சைமன் ஹாரிஸ் பிரதமராகவும், மார்ட்டின் துணை பிரதமராகவும் செயல்படுவார்கள் என பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுயேட்சை உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.