வடகொரிய ராணுவ வீரர்கள் இருவரை பிடித்துள்ள உக்ரேன்; உறுதி செய்துள்ள சியோல் தேசிய புலானய்வு சேவை
வடகொரியாவைச் சேர்ந்த காயமடைந்த இரண்டு ராணுவ வீரர்களை இந்த வாரம் ரஷ்யாவில் பிடித்துள்ளதாக உக்ரேன் கூறும் கருத்தை தென்கொரியாவின் தேசிய புலவாய்வுச் சேவை உறுதிசெய்துள்ளது.
ரஷ்யப் படைகளை வலுவாக்க, வடகொரியா 10,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அங்கு அனுப்பியுள்ளதாக உக்ரேன், அமெரிக்கா, தென்கொரியா ஆகியவை குறைகூறியுள்ளன.
“உக்ரேனிய ராணுவம் வடகொரிய வீரர்கள் இருவரை ரஷ்யாவின் ‘குர்ஸ்க்’ போர்க்களத்தில் ஜனவரி 9ஆம் திகதி பிடித்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது,” என்று சியோலின் தேசிய புலனாய்வுச் சேவை அறிக்கை ஒன்றில் கூறியது.
உக்ரேனிய உளவுத்துறை சனிக்கிழமை (ஜனவரி 11) வெளியிட்ட காணொளி ஒன்றில், இரண்டு நபர்கள் மருத்துவமனை படுக்கையறையில் இருப்பதைக் காண முடிந்தது. அவர்களில் ஒருவரின் கைகளிலும் மற்றொருவரின் தாடையிலும் கட்டுப்போட்டிருந்தது.
முதல் நபரின் கால் முறிந்திருந்ததாக தடுப்பு நிலையத்திலுள்ள மருத்துவர் ஒருவர் கூறினார்.
தாங்கள் அனுபவம் வாய்ந்த ராணுவ வீரர்கள் என்றும் பயிற்சிக்காக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டனர், சண்டைக்காக அல்ல என்றும் அந்த நபர்கள் புலனாய்வு அதிகாரிகளிடம் கூறியதாக உக்ரேனிய உளவுத்துறை தெரிவித்தது.
இருப்பினும், பிடிபட்ட நபர்கள் வடகொரியாவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான நேரடி ஆதாரத்தை உக்ரேன் வழங்கவில்லை. ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தால் அந்த ராணுவ வீரர்களின் குடியுரிமையை உறுதிப்படுத்த முடியவில்லை.