கொடிய காட்டுத்தீக்கு மத்தியில் நிலநடுக்கத்தில் சிக்கிய அமெரிக்க மக்கள்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்று (10) சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லாஸ் ஏஞ்சல்ஸில் பரவி வரும் கொடிய காட்டுத்தீயை அமெரிக்கா எதிர்த்துப் போராடி வரும் வேளையில், அவர்கள் இந்த நிலநடுக்கத்தைச் சமாளிக்க வேண்டியிருந்தது.
லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ பரவி வரும் பகுதியிலிருந்து சுமார் 350 மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நேரப்படி நேற்று காலை 7:02 மணியளவில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதிக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானது.
கோல்டன் கேட் பாலத்திலிருந்து தென்மேற்கே சுமார் 5 மைல் தொலைவிலும், நெடுஞ்சாலையிலிருந்து மேற்கே சுமார் 2 மைல் தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை அப்பகுதியில் 5,000க்கும் மேற்பட்டோர் உணர்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது வேறு எந்த சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.