பாகிஸ்தானில் எதிர்க்கட்சி முக்கிய தலைவர்கள் அதிரடி கைது!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தேசதுரோகம், ஊழல் உள்ளிட்ட வழக்குகளும் அடங்கும்.
இதனிடையே, ஊழல் வழக்கு தொடர்பாக இம்ரான்கான் கடந்த 10ம் திகதி லாகூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் வைத்தே இம்ரான்கானை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இம்ரான்கானை 8 நாட்களில் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இம்ரான்கானை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. மேலும், அடுத்த கட்ட சட்டநடவடிக்கைகள், முன் ஜாமீன் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தை அனுக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவையடுத்து, தனக்கு ஜாமின் வழங்க கோரி இம்ரான்கான் உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் தொடர்பாக இம்ரான்கான் இன்று உயர்நீதிமன்றில் நேரில் ஆஜராக உள்ளார்.இந்நிலையில், இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் சில இடங்களில் வன்முறையாக மாறியுள்ளது.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியான இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி மூத்த தலைவர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்து வருகின்றனர். இம்ரான்கான் கட்சியின் மூத்த நிர்வாகிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்து வருவதால் அரசியல் குழப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னாள் மத்திய மந்திரிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக இம்ரான்கான் ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு ராணுவம் எச்சரிக்கைவிடுத்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.