உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஜிஎஸ்பி சலுகையை பெற்றுக்கொள்ள பாதிப்பாக அமையும் – ஹர்சடி சில்வா!
இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இலங்கை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடிசில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ள அவர், இலங்கை இந்த வருட இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 500 மில்லியன் டொலர் பெறுமதியான வரிச்சலுகையை பெறும் நெருக்கடியை எதிர்கொள்கின்றது என்றும் கூறினார்.
இலங்கைக்கு அதிகளவு அந்நியசெலவாணியை பெற்றுத்தரும் ஆடைதொழில்துறை இந்த வரிச்சலுகையிலேயே தங்கியுள்ளது எனவும், புதிய விதிமுறைகளின் கீழ் இலங்கை பாக்கிஸ்தான் உட்பட ஆறு நாடுகள் ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கு விண்ணப்பிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் தொழிலாளர் உரிமைகள் நல்லாட்சி போன்ற விடயங்களை இலங்கை எவ்வாறு பின்பற்றியது என்பதை அடிப்படையாக வைத்தே 2024 முதல் 2034 வரையிலான காலப்பகுதிக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்குவதா என்பதை தீர்மானிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.