இலங்கையில தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கப்படுத்த திட்டமிடும் அரசாங்கம்!
தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும்போது மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதால் தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகளின் உரிமையாளர்கள் போன்ற தொடர்புடைய தரப்பினருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில் அவர் கூறினார்.
கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர், தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் சில வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவற்றில் சில உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றும், தனியார் மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவ மையங்களையும் ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.