சிங்கப்பூர் – 50cm நீள கத்தியை பயன்படுத்தி இருவர் மீது தாக்குதல் நடத்திய 71 வயது முதியவர் – ஒருவர் பலி
கிங் ஜார்ஜஸ் அவென்யூவில் நடந்த சண்டையில் 50 செ.மீட்டர் நீள கத்தியால் இருவரைத் தாக்கியதாக லிம் டீ டீ மீது செவ்வாய்க் கிழமை (24) குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த 71 முதியவர் சண்டையிட்டதில் அண்டை வீட்டுக்காரர் உயிரிழந்தார். இந்தச் சண்டையில் அவர் மற்றொருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
டிசம்பர் 22ஆம் திகதி காலை 11.30 மணியளவில் கிங் ஜார்ஜஸ் அவென்யூவில் உள்ள புளோக் 805 எட்டாவது மாடியில் சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டையில் லிம் கத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார். அதில் ஒருவர் உயிரிழந்தார். ஆனால் அவர் கத்தியால் எப்படித் தாக்கினர் உள்ளிட்ட விவரம் தெரிவிக்கப்படவில்லை.
அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், லிம்மை தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.இதையடுத்து டிசம்பர் 31ஆம் திகதி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
லிம்மும், 69 வயது முதியவரும் சிறு சச்சரவில் தொடங்கி கைகலப்பில் ஈடுபட்டதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் காயமடைந்த 69 வயது முதியவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
லிம்மும் சுவாவும் மூன்று வீடுகள் இடைவெளியில் எட்டாவது மாடியில் வசித்தனர் என்று அண்டை வீட்டுக்காரர்கள் சிலர் தெரிவித்தனர். சுவா வேலை எதுவும் செய்யவில்லை. லிம், ஒரு கார்ப்பேட்டையில் பாதுகாவலராக பணியாற்றுகிறார்.காவல்துறை விசாரணை தொடர்கிறது.