இந்தியாவில் இணையம் வழியாக 16,000 பேரிடம் ரூ.125 கோடி மோசடி; 21 பேர் கைது
இணையம் வழியாக 16,000க்கும் மேற்பட்டோரிடம் ரூ.125 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாகக் கூறி இந்தியாவில் 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்த இணையக் குற்றவாளிகளிடமிருந்து சிம் அட்டை – கைப்பேசி இடையிலான தொடர்புப் பகுப்பாய்வுத் தரவுகளை குர்கான் காவல்துறையினர் கைப்பற்றினர்.
அதன்மூலம், கடந்த இரு மாதங்களில் அவர்கள் நாடு முழுவதும் 16,788 பேரிடமிருந்து ரூ.125.6 கோடியை மோசடி செய்தது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 16 கைப்பேசிகளும் ஏழு சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை உயரதிகாரி பிரியான்சு திவான் தெரிவித்தார்.
மொத்தம் பதிவான 670 வழக்குகளில், குர்கானில் 11 உட்பட ஹரியானா மாநிலத்தில் மட்டும் 40 வழக்குகள் பதிவாயின என்று அவர் குறிப்பிட்டார்.
பங்குச் சந்தை முதலீட்டு மோசடி மூலம் ரூ.97 லட்சத்தை இழந்த ஒருவர், அதுகுறித்து கடந்த ஜூன் 26ஆம் திகதி இணையக் குற்றப் பிரிவுக் காவல்துறையிடம் புகாரளித்தார்.
அதன் தொடர்பில் டிசம்பர் 9ஆம் திகதி உத்தராகண்டின் பாஜ்பூரைச் சேர்ந்த அனிஷ் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
இத்தகைய பல இணைய மோசடி வழக்குகள் தொடர்பில் ராஜஸ்தான், குர்கான், உத்தராகண்ட், டெல்லி, உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளிலிருந்து மேலும் பலர் கைதுசெய்யப்பட்டனர்.