உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு சட்டரீதியான தடை இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க, தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டவுடன் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்றார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சட்டத்தில், ஜனவரி மாதத்துக்குள் திருத்தம் மேற்கொள்ளப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் சட்டத்தை விரைவில் திருத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் மீண்டும் வேட்புமனுக்களை கோர வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களுக்கு சுமார் எண்பதாயிரம் பேர் தோற்றவுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து பல செலவு அறிக்கைகள் வரவழைக்கப்படுவதால், இது நடைமுறையில் கடினமான பணியாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.