சிறப்பு குழுவை அமைக்க தவறினால் ஹான் மீது குற்றம் சுமத்தப்படும்; மிரட்டல் விடுத்துள்ள தென்கொரிய எதிர்க்கட்சி
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்று தோல்வி அடைந்தார்.அதையடுத்து, அவர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார்.அவர்மீது டிசம்பர் 14ஆம் திகதியன்று குற்றம் சாட்டப்பட்டது.அவரைப் பதவிநீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்க அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற இருக்கிறது.
தென்கொரியாவின் இடைக்கால அதிபராக அந்நாட்டுப் பிரதமர் ஹான் டுக் சூ பொறுப்பேற்றுள்ளார்.இந்நிலையில், முன்னாள் அதிபர் யூன் ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்றது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழு ஒன்றை அமைக்க ஹான் தவறினால் அவர்மீதும் குற்றம் சுமத்தப்படும் என்று தென்கொரியாவின் பிரதான எதிர்க்கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பாலான இடங்களைக் கொண்டுள்ளது.
முன்னாள் அதிபர் யூன்னுக்கு எதிராகக் கிளர்ச்சி உட்பட பல குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள சிறப்புக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி இம்மாதம் மசோதாவை நிறைவேற்றியது.
சொகுசுப் பை மோசடி உட்பட மற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் யூன்னின் மனைவியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜனநாயகக் கட்சி வலியுறுத்துகிறது.ராணுவ ஆட்சியை அமல்படுத்த யூன்னுக்கு ஹான் உதவியதாக ஜனநாயகக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.அவருக்கு எதிராக அக்கட்சி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.
“சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்பதைத் திரு ஹான் தள்ளிப்போடுவது, அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்பதைக் காட்டுகிறது. இது, ராணுவ ஆட்சியை அமல்படுத்த திரு யூன்னுக்கு உதவிய குற்றத்தை அவர் ஒப்புக்கொள்வதற்குச் சமம்,” என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திரு பார்க் சான் டே தெரிவித்தார்.
சிறப்பு விசாரணைக் குழுவை டிசம்பர் 24ஆம் திகதிக்குள் அமைக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
முன்னாள் அதிபர் யூன்னைச் சிறப்பு அரசு வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என்று அது கூறியது.இந்த விவகாரம் குறித்து ஹானின் அலுவலகம் உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.இதற்கிடையே, தென்கொரியாவில் நிலவும் அரசியல் நெருக்கடியால் அந்நாட்டின் பொருளியல் வளர்ச்சி மெதுவடையும் என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் சோய் சாங் மோக் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு, அடுத்த ஆண்டுக்கான முன்னுரைப்புகளை அரசாங்கம் மாற்றி அமைக்க இருப்பதாக அவர் கூறினார்.