இலங்கை 4 பாடசாலை மாணவர்களிடம் பெருந்தொகை 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் மீட்பு
திகன பிரதேசத்தில் 57 போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களுடன் 4 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 பாடசாலை மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.
திகன நகரில் வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெல்தெனிய தலைமையக பொலிஸாரால் 4 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திகன பிரதேசத்தை சேர்ந்த 15 மற்றும் 16 வயதுடைய நான்கு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக திகன நகரிலுள்ள வர்த்தக ஸ்தலமொன்றுக்கு வந்துள்ளனர். அங்கு வர்த்தகருக்கு வழங்கப்பட்ட நாணயத்தாள்கள் போலியானவை என வர்த்தகர் அடையாளம் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனால், தெல்தெனிய தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்திர சேனாதீர மற்றும் ஏனைய அதிகாரிகள் வந்து இந்த மாணவர்களை பரிசோதித்த போது நான்கு மாணவர்களிடமும் 4 ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் காணப்பட்டன.
தெரிந்தவர் ஒருவர் பொருட்களை வாங்குவதற்காக இந்த பணத்தை கொடுத்ததாக இந்த மாணவர்கள் கூறியுள்ளனர். இதன்படி இம்மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாவின் மேலும் 53 நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த மாணவர்களுக்கு போலி நாணயத்தாள்களை வழங்கிய பிரதான சந்தேகநபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில் சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.