யூரிக் அமில அளவு அதிகமாக இருந்தால், தவிர்க்க வேண்டிய உணவுகள்
இந்த நவீன காலத்தில் அதிக யூரிக் அமிலம் பிரச்சனை பலரிடம் காணப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் நமது தவறான உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை. யூரிக் அமிலம் என்பது நமது உடலில் உள்ள ஒரு வகையான கழிவுப் பொருளாகும். இது பியூரின் என்ற வேதிப்பொருளின் முறிவால் உருவாகிறது.
பொதுவாக, சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டி, சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்றுகின்றன. ஆனால் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, அது மூட்டுகளைச் சுற்றி படிகங்களாக குவியத் தொடங்குகிறது. இதன் காரணமாக மூட்டுகளில் வலி, வீக்கம், நடப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகின்றன.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக உள்ளவர்கள், அதை கட்டுப்படுத்த, உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால், சில வகையான உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். யூரிக் அமில நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இறைச்சி மற்றும் கடல் உணவுகள் (Meat, Seafood)
அதிக யூரிக் அமிலம் உள்ளவர்கள் அசைவம் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சிவப்பு இறைச்சி மற்றும் கடல் உணவுகளில் ப்யூரின்கள் அதிகம் உள்ளன. இவை உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கும். யூரிக் அமில நோயாளிகள் சிவப்பு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் கடல் உணவுகள் போன்றவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Processed Foods)
யூரிக் அமில நோயாளிகள் துரித உணவுகள், நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் அதிக அளவு சோடியம், பிரசர்வேடிவ்ஸ் மற்றும் பியூரின்கள் உள்ளன. இவை உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். அவற்றை உட்கொள்வதால் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் அதிகரிக்கும்.
சர்க்கரை பானங்கள் (Sugary Drinks)
அதிக யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் அதிக இனிப்புள்ள பானங்களை உட்கொள்ளக்கூடாது. குளிர்பானங்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட பழச்சாறுகளில் பிரக்டோஸ் மற்றும் சர்க்கரை நிறைந்துள்ளது. இது உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கும். இவற்றை அதிகமாக உட்கொள்வதால் உடலில் யூரிக் அமிலம் உற்பத்தி அதிகரிக்கும். இவற்றுக்கு பதிலாக தண்ணீர், இளநீர் அல்லது மூலிகை தேநீர் அருந்துவது நல்லது.
மதுபானம் (Alcohol)
யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள் மது அருந்தாமல் இருக்க வேண்டும். குறிப்பாக, பீரில் அதிக அளவில் ப்யூரின்கள் உள்ளன. இது யூரிக் அமில அளவை அதிகரிக்கும். மேலும் மதுபானம் உட்கொள்வது யூரிக் அமிலத்தின் வெளியேற்றத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக யூரிக் அமிலம் உடலில் சேரத் தொடங்குகிறது.
அதிக புரதம் உள்ள உணவுகள் (High Protein Foods)
யூரிக் அமிலம் உள்ளவர்கள் அதிக புரதச்சத்து உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளக்கூடாது. பருப்பு, சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், பீன்ஸ், கீரை, பால், தயிர் போன்றவற்றை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. இவற்றில் பியூரின்கள் அதிக அளவில் உள்ளன. இது உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும்.