உக்ரேனுக்கு $385 மில்லியன் பெறுமதியான ராணுவ உதவியை அறிவித்துள்ள பிரிட்டன்
பிரிட்டன் உக்ரேனுக்கு 2025ஆம் ஆண்டுக்கான 225 மில்லியன் பவுண்ட் (S$385 மில்லியன்) மதிப்பிலான ராணுவ உதவியை, டிசம்பர் 19ஆம் திகதி அறிவித்துள்ளது.ஆளில்லா வானூர்திகள், படகுகள், ஆகாயத் தற்காப்புக் கட்டமைப்புகள் உள்ளிட்டவை அதில் அடங்கும்.
பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலே டிசம்பர் 18ஆம் திகதி கியவ்வில் உக்ரேனியத் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவைச் சந்தித்துப் பேசிய பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சந்திப்பில் 2025ல் உக்ரேனுக்கான பிரிட்டனின் ஆதரவை அதிகரிக்க அமைச்சர் ஹீலே உறுதியளித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரேன் மீதான படையெடுப்பை மேற்கொண்டு மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அவரது எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கிய உக்ரேனிய மக்களின் துணிச்சலைத் ஹீலே பாராட்டினார்.
இருப்பினும் அவர்கள் இதில் தனித்து ஈடுபட இயலாது என்பதால் பிரிட்டன் உக்ரேனுக்குக் கூடுதல் ஆதரவு வழங்குவதாக அவர் குறிப்பிட்டார். புட்டின் இந்தப் போரில் வெற்றிபெறாமல் தடுப்பதை உறுதிசெய்ய, உக்ரேனுக்கு பிரிட்டன் தோள்கொடுக்கும் என்றார் அவர்.
உக்ரேனிய அமைச்சர் உமெரோவ், பிரிட்டனின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். தங்கள் தற்காப்பு முயற்சிக்கு, நிலையான ஆயுத விநியோகம் தொடர்ந்து கிடைப்பது முக்கியம் என்று அவர் கூறினார்.
ரஷ்யா வடகொரியர்களைப் போர்க்களத்தில் ஈடுபடுத்தியதை அடுத்து மேலை நாடுகள் உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்க முனைந்துள்ளன.