இலங்கை: சட்டவிரோத கருக்கலைப்பு தொடர்பாக மருத்துவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா உத்தரவிட்டுள்ளதாக மவ்பிம நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பெண் ஒருவர் தனது கணவருக்குத் தெரியாமல் ஏழு வாரங்களுக்கும் மேலான கருவைக் கலைத்தமை தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருவைக் கலைத்ததாகக் கூறப்படும் பெண் கொழும்பு 14 ஐச் சேர்ந்த அவரது கணவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.
சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.