கேரளாவில் கைகளை பிடித்து காரில் இழுத்துச் செல்லப்பட்ட பழங்குடியின நபர்; வழக்கு பதிவு செய்த பொலிஸார்
காரில் சென்ற சிலர், பழங்குடியின நபர் ஒருவரின் கையைப் பிடித்தபடி சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம் இந்தியாவின் கேரள மாநிலம், வயநாட்டில் ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 15) நிகழ்ந்தது.
தடுப்பணையைச் சுற்றிப் பார்க்கச் சென்ற சுற்றுப்பயணிகளிடையே ஏற்பட்ட சண்டையை விலக்கிவிடச் சென்றதால், மாதன் என்ற அந்த நபர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த காரிலிருந்தோர் ஒரு கடையின்முன் காரை நிறுத்தி, தகாத சொற்களைப் பயன்படுத்தியதாக உள்ளூர்வாசிகள் கூறினர். பின்னால் வந்த இன்னொரு வாகனத்தின்மீது அவர்கள் கற்களை வீச முயன்றதாகவும் சொல்லப்பட்டது.இதனிடையே, சண்டையை விலக்கிவிட மாதன் முயன்றதாகவும் அதன்பின் அக்கும்பல் அவரைத் தாக்கியதாகவும் கூறப்பட்டது.
காருக்குள் இருந்தவர்கள் மாதனின் கைகளைப் பிடித்திருந்ததைப் படங்கள் காட்டின. கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தொலைவிற்கு அவர் இழுத்துச் செல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவருக்குக் கைகளிலும் கால்களிலும் வயிற்றிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
இச்சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் வெளியானதை அடுத்து, நால்வர்மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. காரின் உரிமையாளரும் மலப்புரத்தைச் சேர்ந்தவருமான முகம்மது ரியாசைத் தொடர்புகொள்ள காவல்துறை முயன்று வருகிறது.
அத்துடன், இச்சம்பவத்தில் தொடர்புடைய இன்னொரு கார் குறித்தும் அவ்விரு கார்களில் இருந்தவர்களுக்கு இடையில் ஏற்பட்டதாக நம்பப்படும் சண்டை குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.