மன அழுத்தத்தை ஓட விரட்டும் ஆற்றல் கொண்ட உணவுகள்
இன்றைய காலகட்டத்தில், மன அழுத்தம் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநலம் தொடர்பான பிரச்சனைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. பணியில் ஏற்படும் வேலைபளு மற்றும் அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உறவுச் சிக்கல்கள் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் என்பது பொதுவான பிரச்சனையாக மாறி விட்டது. இன்றைய துரித கதியிலான வாழ்க்கையில், மனச்சோர்வு மற்றும் பதற்றம் இல்லாதவர்களை பார்ப்பது அரிது.
மன நிலையில் ஏற்படும் பாதிப்பு, உடல் ஆரோக்கியத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், மருந்துகள் மற்றும் சிகிச்சையுடன், சிறந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி இந்த பிரச்சனைகளை சமாளிக்க உதவும். இந்நிலையில், மன ஆரோக்கியத்தை மேம்படுத்த (Health Tips) உதவும் சிறந்த உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
நட்ஸ் மற்றும் விதைகள் (Nuts and seeds)
பாதாம், வாதுமை பருப்புகள், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகள் மன ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. அவற்றில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை மூளைக்கு ஊட்டமளித்து மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
தயிர் (Curd)
தயிர் போன்ற புளிக்க வைக்கப்பட்ட ப்ரோபயோடிக் உணவுகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் உணவுகள். ஆரோக்கியமான குடல் செயல்பாடு, மனதை அமைதிபடுத்தி மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்க உதவும்
பச்சை இலை காய்கறிகள் (Green leafy vegetables)
கீரை போன்ற பச்சை இலைக் காய்கறிகள், ஃபோலேட்டின் (வைட்டமின் பி9) சிறந்த ஆதாரங்கள். இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள், ப்ரீரேடிக்கலகளை எதிர்த்து போராடி, மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், ஃபோலேட் குறைபாடு மனநிலை மாற்றங்கள் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில் பச்சை இலைக் காய்கறிகள் மூளையை சுறுசுறுப்பாக வைத்து மன அமைதிக்கு உதவுகின்றன.
மேலும் படிக்க | அசைவ உணவுகளுக்கு இணையான புரத சத்து உள்ள மசூர் பருப்பு… வியக்க வைக்கும் நன்மைகள்
கருப்பு சாக்லேட் (Dark chocolate)
டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இது மூளையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது. சாக்லேட்டில் உள்ள காஃபின் மற்றும் தியோப்ரோமைன் போன்ற கூறுகள் மன அழுத்தத்தை போக்கும் ஆற்றல் கொண்டவை
மீன் உணவுகள் (Fish Food)
மீன், குறிப்பாக சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. இந்த கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. எனவே, அதனை அடிக்கடி சேர்த்துக் கொள்வது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
வைட்டமின் டி நிறைந்த உணவுகள்
வைட்டமின் டி மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் டி ஊட்டச்சத்தை சூரிய ஒளியில் இருந்து பெறலாம். அதோடு, மீன், பால் பொருட்கள், மாட்டிறைச்சி மற்றும் முட்டை ஆகிய வைட்டமின் டி நிறைந்த உணவுகளும் மிகவும் நன்மை பயக்கும்.
மன நல பாதிப்பின் அறிகுறிகள்
மன நல பாதிப்பின் அறிகுறிகளில் அமைதியின்மை, பதட்டம், குமட்டல், செரிமான பிரச்சனைகள், உணர்வின்மை, கைகள் மற்றும் பாதங்களில் ஜில்லென்ற உணர்வு, எதிர்மறை எண்ணங்கள் ஆகியவை அடங்கும். இந்த அறிகுறிகள் நீண்ட காலம் நீடித்தால், அவை மன அழுத்தமாக மாறும். இது நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அலட்சியம் கூடாது.