பும்ரா விரைவில் மோசமான பந்து வீச்சாளராக மாறுவார்.. ஷோயப் அக்தர் அதிர்ச்சி தகவல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு காரணமாக இருந்த ஜஸ்பிரித் பும்ரா, ஐசிசி தரவரிசையில் 890 புள்ளிகள் பெற்று உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலராக ஆதிக்கம் செலுத்திவருகிறார்.
அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா மண்ணில் 19.18 சராசரியுடன் கடந்த நூறாண்டில் சிறந்த சராசரி வைத்திருக்கும் பவுலராகவும் மாறி வரலாற்று சாதனை படைத்தார்.
இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சத்தில் இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற வேண்டும் என்றும், ஒருவேளை அவர் ஓய்வு பெறாவிட்டால் விரைவில் மோசமான பவுலராக மாறுவார் என்றும் பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா குறித்து சமீபத்திய நகாஷ் கான் ஷோ போட்காஸ்டில் பேசியிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர், “பும்ராவால் டெஸ்ட் கிரிக்கெட்டில் போதுமான அளவு விக்கெட்டை வீழ்த்த முடியும் என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் அவரால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவிற்கு வெற்றியை தேடித்தர முடியவில்லை. காரணம் அவருக்கு பந்து திரும்பாத ஆடுகளங்களில் விக்கெட்டை வீழ்த்துவதற்கு அதிகப்படியான வேகம் தேவைப்படுகிறது.
பந்தை ஸ்விங் செய்யமுடியாத ஆடுகளங்களில் பும்ராவிற்கு அதிக வேகம் தேவைப்படுகிறது. விக்கெட்டை தேடி அதிகவேகத்திற்கு அவர் சென்றால் அவருடைய முதுகை அதிகம் வளைக்கவேண்டியிருக்கும். அதனால் அவருக்கு காயம் ஏற்பட அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.
பும்ரா ஒரு சிறந்த பந்துவீச்சாளர், இரண்டு பக்கமும் அவரால் ஸ்விங் செய்யமுடியும். ஆனால் அவர் ஐபிஎல்லில் விளையாட விரும்புகிறார், அத்துடன் டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்துவிதமான வடிவங்களிலும் விளையாட விரும்புகிறார். பும்ராவிற்கு குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளானது அதிகப்படியான வெற்றியை கொடுக்ககூடியதாக இருக்கிறது. அதற்கு தகுந்தாற்போலவே அவரும் தன்னை தயார் செய்துவைத்துள்ளார்.
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் முற்றிலும் மாறானது, இங்கு வீரர்கள் அடித்து விளையாட போவதில்லை. அப்படி இருக்கும்போது நீங்கள் வீரர்களின் விக்கெட் வீழ்த்த வேண்டுமென்றால் அதிகப்படியான வேகம் உங்களுக்கு தேவை. அது பும்ராவிற்கு பாதகத்தையே ஏற்படுத்தும், அவருக்கு இதுவரை அவருடைய பொறுப்புகளை இந்திய அணி சரியாக பங்கிட்டு வருகிறது. ஆனால் அனைத்து நேரத்திலும் இது பொருந்தாது, உங்களால் விக்கெட்டை வீழ்த்த முடியாதபோது மக்கள் கடுமையாக விமர்சிப்பார்கள். அதனால் விரைவில் பும்ரா டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகுவது சிறந்தது” என்று கூறியுள்ளார்.