தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யங்-ஹியூனிடமிருந்து ‘ரகசியக் கைபேசி’ பறிமுதல்
தென்கொரிய காவல்துறை விசாரணையாளர்கள், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யங்-ஹியூனிடமிருந்து கைபேசியைப் பறிமுதல் செய்துள்ளனர்.
அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்த குறுகியகால ராணுவச் சட்டத்திற்கு அவர்தான் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.அந்தக் கைபேசி, ‘ரகசிய கைபேசி’ என ஊடகங்களால் அழைக்கப்படுகிறது.
அதில் விசாரணைக்குத் தேவையான முக்கிய தரவுகள் அடங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவச் சட்டம் அமலாக்குவது குறித்து அவர், அதிபர் யூனுடன் கலந்துரையாடிய தகவலும் அதில் அடங்கியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.அந்தக் கைபேசியை இடைமறித்துக் கேட்கவோ உரையாடலை பதிவு செய்யவோ முடியாது எனக் கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் கூட்டு விசாரணையைத் தொடங்கியபோது வியாழக்கிழமை (டிசம்பர் 12) முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம்மின் ரகசியக் கைபேசி பற்றி தெரிய வந்தது.
டிசம்பர் 11ஆம் திகதி அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் தேடி மீட்கும் சோதனையின்போது கைபேசியையும் அதனுடன் இணைக்கப்பட்ட மையக் கணினி கட்டமைப்பையும் கைப்பற்றியது என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகம், அதிபரின் அலுவலகம் உள்ள அதே வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.யூனும் கிம்மும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். இருவரும் டிசம்பர் 3ஆம் திகதிக்கும் 4ஆம் திகதிக்கும் இடையே ஆறு மணி நேரம் ராணுவ ஆட்சி அமலில் இருந்தபோது தளபதிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்காக அந்த கைபேசியைப் பயன்படுத்தியதாக யோன்ஹாப் தெரிவித்தது.
இதற்கு முன்பு, டிசம்பர் 8ஆம் திகதி கிம்மின் கைபேசியைக் கைப்பற்றுவதற்காக அலுவலகத்தையும் அலுவலக வீட்டையும் காவல்துறை பலதுறை சோதனையிட்டு தோல்வியைத் தழுவியது.
இதையடுத்து டிசம்பர் 10ஆம் திகதி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது, அதிகாரிகளை கடமையைச் செய்யவிடாமல் இடையூறு விளைவித்தது போன்ற குற்றச்சாட்டுகளின்கீழ் கிம் கைது செய்யப்பட்டார்.