இந்தியா – 55 மணிநேரப் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மரணம்
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தௌசாவில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 5 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தான்.
55 மணி நேரத்துக்கும் மேல் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளுக்குப் பிறகு, ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆர்யன் என்ற அந்தச் சிறுவன், மயக்க நிலையில் அவசர மருத்துவ வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
“ஆழ்துளையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு அனைத்து உயிர்க்காப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்,” என்று காவல்துறையினர் கூறினர்.
கடந்த டிசம்பர் 9ஆம் திகதி பிற்பகல் 3 மணி, கலிகாட் கிராமத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.
ஆர்யன் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக அவனது தாயின் கண்முன்னே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவனை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றதும், குழாய் மூலம் சிறுவனுக்குப் பிராணவாயு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.கிணற்றுக்கு உள்ளே நடவடிக்கைகளைக் கண்காணிக்க கேமராவும் அனுப்பப்பட்டது. சிறுவனை மீட்க ஆழ்துளைக் கிணற்றை ஒட்டி, அதற்கு இணையாக மற்றொரு குழியும் தோண்டப்பட்டது.
“சிறுவனை மீட்கும் பணியில் பல சவால்கள் இருந்தன. அந்தப் பகுதியில் நீர்மட்டம் 160 அடியாக இருந்தது. குழந்தையின் எந்த அசைவையும் கேமராவில் படம்பிடிப்பது சிரமம். மீட்புப் பணியாளர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம்,” என்று தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்தது.