கொலை பற்றிய அதிக ஆர்வத்தால் 34 வயது பெண்ணை கொன்ற கிரிமினாலஜி மாணவன்
இங்கிலாந்தை சேர்ந்த கிரிமினாலஜி (குற்றவியல்) பட்டப்படிப்பு மாணவன் கொலை செய்வது எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள நிஜமாகவே கொலைகளை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த 20 வயதான நசென் சாடி லண்டனில் உள்ள க்ரீன்விச் பல்கலைக்கழகத்தில் கிரிமினாலஜி பயின்று வந்த மாணவர். படிப்பு சம்பந்தமாக கொலைகளை பற்றி ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார்.
எனவே “ஒரு உயிரைப் பறித்தால் எப்படி இருக்கும்” என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வினோத ஆசை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த மே 24 ஆம் தேதி, இங்கிலாந்தில் தெற்கு கரையில் உள்ள போர்ன்மவுத் (Bournemouth) கடற்கரையில் இரவில் முழு நிலவின் கீழ் நெருப்பில் குளிர்காய்ந்தபடி அரட்டை அடித்துக் கொண்டு 34 வயது ஏமி கிரே மற்றும் 38 வயது லீன் மைல்ஸ் ஆகிய இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர்.
அவர்களை கத்தியுடன் நெருங்கிய நசென் சாடி, இருவரையும் கடற்கரையில் துரத்தித் துரத்தி சாராமரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஏமி கிரே உயிரிழந்தார். மைல்ஸ் பலத்த காயங்களுடன் அங்கிருந்து ஓடிச்சென்று உயிர் தப்பியுள்ளார்.
தாக்குதலுக்கு முன்னதாக, நசென் சாடி தெற்கு இங்கிலாந்து முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்தார், இறுதியில் போர்ன்மவுத்தை தேர்ந்தெடுத்து கொலைக்காக பல வாரமாக திட்டமிட்டு வந்துள்ளார்.
தாக்குதல் நடத்தியதற்கு முந்தைய நாள் இரவு ஹோட்டல் அறையில் கத்தியை பயன்படுத்தி கொலைகளை செய்யும் காட்சிகள் அதிகம் உள்ள SLASHER வகை படங்களை பார்த்துள்ளார்.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சாடி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.