வாகன இறக்குமதிக்கு அனுமதி – அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்
சில கட்டுப்பாடுகளுடன் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வாகன இறக்குமதி தொடர்பில் முடிவெடுக்கும் போது, நாட்டின் கையிருப்பு மற்றும் பொருளாதாரம் உள்ளிட்டவை கவனத்திற் கொள்ளப்படும்.
வாகன இறக்குமதி தொடர்பான முரண்பாடான விளம்பரங்கள் வாகன இறக்குமதி தொடர்பில் முரண்பாடான விளம்பரங்களை வெளியிட்டு மக்களை குழப்ப வேண்டாம் என்று நான் சில நிறுவனங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
ஏனென்றால், வாகன இறக்குமதி தொடர்பில் முடிவெடுக்கும் போது, நாட்டின் கையிருப்பு மற்றும் பொருளாதாரம் மீது அக்கறை செலுத்தி, சிந்தித்து முடிவு எடுக்கப்படும்.
பொருளாதாரத்தை பாதிக்கும், அல்லது பொருளாதாரத்திற்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில், வாகன இறக்குமதி தொடர்பான முடிவினை எடுக்க நாங்கள் தயாராக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் எதனையும் அறிவிக்காத நிலையில், சில நிறுவனங்கள் வாகன இறக்குமதி தொடர்பில் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பேராசிரியர் அமிந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதாக தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், வாகன இறக்குமதி தொடர்பில் உறுதியான முடிவு எதனையும் அரசாங்கம் வெளியிடவில்லை.
எனினும், எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்ற கருத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி புதிய வாகனங்களுக்காக சில நிறுவனங்கள் இலட்சக்கணக்கான ரூபாயை முற்பணமாக பெற்றுக் கொள்வதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.