மதுபான உரிமம் குற்றச்சாட்டு – பதில் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில்
கலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறி முன்னாள் ஜனாதிபதி மதுபான உரிமம் எதனையும் வழங்கவில்லை என ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வழங்கப்பட்ட புதிய மதுபான அனுமதிப்பத்திரத்தின் மூலம் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் அரசாங்கம் 3.1 பில்லியன் வருமானத்தை பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
19 ஆகஸ்ட் 2024 அன்று தேர்தல் ஆணையம் கலால் ஆணையர் ஜெனரலுக்கு அனுப்பிய கடிதத்தில் செய்யப்பட்ட பரிந்துரைகளின் மூலம் மதுபான உரிமங்களை வழங்குவதில் பின்பற்றப்பட்ட நடைமுறையின் நியாயத்தன்மை சரிபார்க்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த “முறையான வருவாய் ஈட்டும்” மதுபான உரிமங்களை புதுப்பிக்கவோ அல்லது ரத்து செய்யவோ பதவியில் இருக்கும் அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது என்பதை இது மேலும் எடுத்துக்காட்டுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மதுபான அனுமதிப் பத்திரங்களை அரசியல் கைக்கூலியாக வழங்கியதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 361 மதுபான விற்பனையாளர்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளார்.
“ஜனவரி முதல் மொத்தம் 361 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 172 மதுக்கடை அனுமதிகள் உள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சி மாறுவதற்கு தூண்டுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அனுமதிப்பத்திரங்கள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம்” என ரத்நாயக்க பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே தெரிவித்தார்.