நேரத்தை வீணாக்காமல் பயிற்சியை தொடங்குமாறு இந்திய அணிக்கு அறிவுரை!
நேரத்தை வீணாக்காமல் இந்திய அணி பயிற்சியை தொடங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலுமே சரியாக செயல்படவில்லை. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், அடிலெய்டு டெஸ்ட்டில் மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளனர்.
அடிலெய்டு டெஸ்ட்டில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், இந்திய அணி வீரர்கள் ஹோட்டல் அறைகளில் நேரத்தை வீணாக்காமல், உடனடியாக மூன்றாவது போட்டிக்கான பயிற்சியை தொடங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மீதமுள்ள 3 போட்டிகளை 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இந்திய அணி பார்க்க வேண்டும். இந்த டெஸ்ட் தொடர் 5 போட்டிகள் கொண்ட தொடர் என்பதை இந்திய அணி மறந்துவிட வேண்டும். அடுத்த இரண்டு நாள்கள் இந்திய அணி அவர்களது நேரத்தை ஹோட்டல் அறைகளில் வீணடிக்காமல் உடனடியாக பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை விரும்புகிறேன். அது மிகவும் முக்கியம்.
இந்திய அணி வீரர்கள் ஹோட்டல் அறைகளிலோ அல்லது வேறு எங்கும் செல்வதற்காகவோ இங்கு இல்லை. அவர்கள் இங்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக வந்துள்ளனர். அவர்கள் நாள் முழுவதும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. காலையிலோ அல்லது மாலையிலோ பயிற்சி மேற்கொள்ளுங்கள். ஆனால், அடுத்த இரண்டு நாள்களும் கண்டிப்பாக பயிற்சி மேற்கொள்ளுங்கள். டெஸ்ட் போட்டி 5 நாள்கள் நடைபெற்றால், வீரர்கள் கண்டிப்பாக முழுமையாக ஐந்து நாள்களும் விளையாடப் போகின்றனர். போட்டி சீக்கிரம் முடியும் பட்சத்தில் மீதமுள்ள நாள்களில் வீரர்கள் அடுத்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 14 ஆம் திகதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.