இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட நிதியை மீட்க அமெரிக்கா ஆதரவு
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய ஊழலுக்கு எதிரான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி செயலகத்தில் வெளிப்படுத்தினார்.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக திரு லு தெரிவித்தார்.
இலங்கையின் ஊழல் எதிர்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிதியை மீட்பதற்கு தொழில்நுட்ப நிபுணத்துவ உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
முக்கிய அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக சவால்களுக்கு புதிய நிர்வாகம் முன்னுரிமை அளித்ததற்கு அமெரிக்க அரசாங்கத்தின் பாராட்டுக்களை இந்த விவாதம் எடுத்துக்காட்டுகிறது. இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் ஆதரவை திரு. லூ மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இலங்கையின் அரசியல் கலாசாரம் ஊழல் மற்றும் வீண்விரயத்தில் கணிசமான அளவில் செல்வாக்கு செலுத்துவதாக குறிப்பிட்டார்.
புதிய மற்றும் மேம்பட்ட அரசியல் கலாசாரத்தை வளர்ப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் வலியுறுத்தினார்.