கல்லீரலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தூக்கமின்மை பிரச்சனை
நம் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுக்கும் நல்ல தூக்கம் அவசியம். தூக்கமின்மை மனச்சோர்வு, எரிச்சல் உணர்வு ஏற்படுவதோடு, அவை ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சியை அளிக்கும் வகையிலான புள்ளிவிவரங்களை அளித்துள்ளது. தீவிர கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 45% பேர் தூக்கமின்மை நோயால் அவதிப்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது. தூக்கமின்மை உங்கள் கல்லீரலில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறது இந்த ஆய்வு.
தூக்கமின்மை காரணமாக உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்காமல், பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் என்று முந்தைய ஆராய்ச்சிகள் பலவும் கூட எச்சரித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தூக்கமின்மை ‘சைலண்ட் கில்லர்’ அதாவது மெல்ல கொல்லும் நோய் என்றும் விவரிக்கப்படுகிறது. தூக்கம் சரியில்லை என்றால், உங்களின் நோயெதிர்ப்பு சக்தி குறையும். தூக்கமின்மை பிரச்சனை, கவனச்சிதறலை ஏற்படுத்தலாம். உங்கள் முடிவெடுக்கும் திறன், நினைவாற்றல் ஆகியவை மங்கி போகலாம்.
வளர்சிதை மாற்ற செயலிழப்பு – தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் (MASLD) மற்றும் MASH என்னும் ஸ்டீடோஹெபடைடிஸ், கல்லீரல் செயலிழப்பு போன்ற தீவிர கல்லீரல் நோய்களுக்கும், தூக்கமின்மை பிரச்சனைக்கும், நேரடி தொடர்பு இருப்பதாக புதிய ஆராய்ச்சி ஒன்று நிரூபித்துள்ளது.
ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கப்படும் இந்த கல்லீரல் பிரச்சனை பலருக்கு இருக்கும் மிகவும் பொதுவான கல்லீரல் நோயாகும்.
இதானால், உலகளவில் 30% பெரியவர்களும் 7% முதல் 14% குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தரவுகள் கூறுகின்றன. 2040ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வயது வந்தவர்களில் 55% க்கும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
சுவிட்சர்லாந்தின் பாசல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த நோய்க்கும் தூக்க முறைக்கும் உள்ள தொடர்பை தெளிவுபடுத்தியுள்ளனர். ஃபிரான்டியர்ஸ் இன் நெட்வொர்க் பிசியாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, MASLD நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தூக்கம் முறை சாதாரண உடல் நிலை உள்ளவர்களிடம் இருந்து கணிசமாக வேறுபட்டது என்பதை காட்டுகிறது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் MASLD, MASH (ஸ்டீடோஹெபடைடிஸ்) அல்லது சிரோசிஸ் போன்ற நிலைமைகளைக் கொண்ட 46 வயது வந்த ஆண்களும் பெண்களும் அடங்குவர். அவர்கள் உடல் நிலை ஆரோக்கியமான உடல் நிலை கொண்ட 16 வயது வந்தவர்களுடனும், MASH அல்லாத சிரோசிஸ் உள்ள 8 பேருடனும் ஒப்பிடப்பட்டது.
MASLD மற்றும் MASH வலை லிவர் பாதிப்புடன் தொடர்புடைய நோயாளிகளின் தூக்கத்தின் தரம் சாதாரண மக்களை விட மோசமாக இருப்பதாக முடிவுகள் காட்டுகின்றன. கூடுதலாக, 32% MASLD நோயாளிகள் மன அழுத்தத்தின் காரணமாக தூங்குவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்தனர். அதேசமயம் ஆரோக்கியமான பங்கேற்பாளர்களில் 6% பேருக்கு மட்டுமே இந்த பிரச்சனை காணப்பட்டது.