தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பில் சீனாவுக்கு எதிராக பிலிப்பீன்ஸ் தூதரக ரீதியில் எதிர்ப்பு
தென் சீனக் கடலில் டிசம்பர் 4ஆம் திகதி நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் சீனாவுக்கு எதிராக பிலிப்பீன்சின் வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை (டிசம்பர் 5), தூதரக ரீதியில் எதிர்ப்பைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சீனாவும் பிலிப்பீன்ஸும் புதன்கிழமை (டிசம்பர் 4) ஸ்கார்புரோ ஷோலைச் சுற்றி நடந்த கடல்துறை மோதல் தொடர்பில் ஒன்று மற்றதன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அந்த இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடந்துவரும் தீவிர தகராற்றில் இது ஆக அண்மையானதாகும்.
இது இந்த ஆண்டு சீனாவுக்கு எதிராக மணிலாவால் பதிவு செய்யப்பட்ட 60வது தூதரக ரீநியான எதிர்ப்பாகும். மேலும் 2022ல் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பதவியேற்றதிலிருந்து 193வது முறையாகப் பதிவு செய்யப்பட்ட அரசதந்திர எதிர்ப்பு என்று வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெய்ஜிங், ஸ்கார்புரோ ஷோல் உட்பட தென் சீனக் கடல் முழுவதையும் உரிமை கொண்டாடுகிறது. இது அதன் அண்டை நாடுகளைக் கோபப்படுத்தியுள்ளது. பிரத்தியேக பொருளாதார மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தங்கள் எல்லைகளை சீனா ஊடுறுவுவதாக அவை கூறுகின்றன.
பெய்ஜிங்கின் விரிவான கூற்றுகளுக்கு அனைத்துலக சட்டத்தின் கீழ் எந்த அடிப்படையும் இல்லை என்று தி ஹேக்கில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றத்தின் 2016ஆம் ஆண்டு தீர்ப்பை சீனா நிராகரித்துள்ளது என்று ராய்ட்டர்சின் செய்தி கூறுகிறது.