பாகிஸ்தானில் நிலவும் இனவாத சண்டை ; 130-ஐ தாண்டிய பலியானோர் எண்ணிக்கை
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள ‘குர்ராம்’ மாவட்டத்தில் மோசமான இனவாதச் சண்டைகள் தொடர்கின்றன.சென்ற வாரம் உத்தேசச் சண்டைநிறுத்தம் நடப்புக்கு வந்தபோதும், சண்டைகள் நீடிப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 130ஐத் தாண்டிவிட்டது.
பிரச்சினைக்குத் தீர்வுகாண அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள ‘குர்ராம்’ மாவட்டம், பல்லாண்டுகளாக இனவாதப் பதற்றங்களுக்கு மையப்பகுதியாக இருந்துவந்துள்ளது.
சன்னி, ஷியா இனத்தவருக்கு இடையே நடந்த கடும் சண்டைகளில் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து, சென்ற மாதம் புதிய கலவரங்கள் வெடித்தன.கடந்த ஒன்றரை வாரத்தில் 133 பேர் கொல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாக அதிகாரி வாஜிட் ஹுசைன் கூறினார்.இரண்டு சமூகங்களுக்கு இடையே சண்டையை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், இதுவரை அதற்கு தீர்வு ஏதும் கிடைக்கவில்லை, என்றார் அவர்.
பாகிஸ்தான் அரசாங்கக் குழு ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு தரப்புகளுக்கும் இடையே ஏழு நாள் சண்டைநிறுத்த உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
பல்லாண்டுகளாக, ‘குர்ரம்’ மாவட்டத்தில் நிலம், மற்ற உள்ளூர் பூசல்கள் ஆகியவற்றின் தொடர்பில், ஆயுதமேந்திய ஷியா, சன்னி முஸ்லிம்கள் பழங்குடி, இனவாதச் சண்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இதற்கிடையே, கைபர் பக்துன்குவா மாநில முதலமைச்சர் அலி அமின் கான் கண்டபூர், பழங்குடி மூத்தோரும் தலைவர்களும் கலந்துகொண்ட கூட்டத்திற்காக சனிக்கிழமை (நவம்பர் 30) அந்தப் பகுதிக்குச் சென்றார்.
“ஆயுதமேந்தும் எவரும் பயங்கரவாதியாக நடத்தப்படுவார். அவர்களின் விதி பயங்கரவாதியின் விதியைப் போலவே இருக்கும்,” என்று கண்டபூர் கூறினார்.