டொனால்ட் ட்ரம்ப்புடன் மெட்டா நிறுவன CEO மார்க் ஸூகர்பெர்க் சந்திப்பு
அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப்பை மெட்டா நிறுவன CEO மார்க் ஸூகர்பெர்க் புதன்கிழமை அன்று புளோரிடாவில் சந்தித்துள்ளார். இருவரும் மார்-எ-லாகோ கிளப்பில் சந்தித்துள்ளனர்.
இது குறித்து ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சி காலத்தில் வெள்ளை மாளிகையின் துணை தலைமை அதிகாரியாக செயல்பட உள்ள ஸ்டீபன் மில்லர் தெரிவித்தது, “அனைத்து தொழில் நிறுவன தலைவர்களும் ட்ரம்ப்பின் பொருளாதார திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போலவே மார்க் ஸூகர்பெர்கும் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதில் அவர் உறுதியாக உள்ளார். அது அவரது ஆர்வமாக உள்ளது” என்றார்.
புதிதாக அமையவுள்ள அரசு நிர்வாகம் குறித்து ட்ரம்ப் உடன் கலந்து பேச புதன்கிழமை அன்று இரவு உணவில் பங்கேற்க மார்க் ஸூகர்பெர்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அவர் அதில் பங்கேற்றார். அப்போது ட்ரம்ப் குழுவினரும் இருந்தனர் என்பதை மெட்டா செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவில் வெடித்த வன்முறையை தொடர்ந்து ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது. கடந்த 2023 அவரது கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
2024 அதிபர் தேர்தலில் மார்க் ஸூகர்பெர்க், எந்தவொரு அதிபர் வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை. இருப்பினும் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட முதல் கொலை முயற்சி தாக்குதலுக்கு பிறகு அவரது மீட்சி குறித்து மார்க் ஸூகர்பெர்க் கருத்து தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் பைடன் அரசு நிர்வாகம் கரோனா குறித்த கன்டென்ட்களை சென்சார் செய்ய சொல்லி வற்புறுத்தியதாக அவர் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
அதே நேரத்தில் மார்க் ஸூகர்பெர்கை ட்ரம்ப் வெளிப்படையாக சாடி வந்தார். கடந்த ஜூலையில், ‘தேர்தல் மோசடியில் பகுதி அளவில் பங்கு கொண்டிருப்பவர்களும் சிறைக்கு செல்ல நேரிடும்’ என சொல்லியது குறிப்பிடத்தக்கது. மேலும், எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் எலான் மஸ்க், ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்களது சந்திப்பு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.