அதிபர் லாய் சிங்-டேயின் பசுபிக் வட்டார பயணம் ; விமனா தற்காப்பு பயிற்சியை நடத்திய தைவான்
தைவான் ராணுவம் தனது எதிர்த் தாக்குதல் திறனைச் சோதிக்க வியாழக்கிழமை (நவம்பர் 28) காலையில் விமானத் தற்காப்புப் பயிற்சியை நடத்தியது.
தைவான் அதிபர் லாய் சிங்-டே இவ்வார இறுதியில் அமெரிக்கா வழியாக பசிபிக் வட்டாரத்திற்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் வேளையில் அந்தத் தற்காப்புப் பயிற்சி நடைபெற்றுள்ளது.
அந்தப் பயணத்தை மனதில்கொண்டு இன்னும் ஒருசில நாள்களில் தைவான் அருகே ராணுவப் பயிற்சியை சீனா தொடங்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தைவானையும் அதனைச் சுற்றியுள்ள வட்டாரத்தையும் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள், நிலைமையை ஆராய்ந்து அந்தத் தகவலை வெளியிட்டனர்.
தைவான் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்றும் அதன் அதிபர் லாய் ஒரு ‘பிரிவினைவாதி’ என்றும் சீனா கூறி வருகிறது.ஆனால், தைவானின் வருங்காலம் குறித்து அதன் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று அதிபர் லாய் தெரிவித்துள்ளார்.மேலும், சீனாவுடன் பேச்சு நடத்த அவர் விடுத்த அழைப்புகள் பலனளிக்கவில்லை.
அவர் இம்மாதம் 30ஆம் திகதி தனது பசிபிக் நாடுகளின் பயணத்தைத் தொடங்குகிறார். அமெரிக்காவில் எந்த நகரங்களின் வழியாக அவர் செல்வார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
“அதிபரின் பயணத்தைப் பயன்படுத்தி சீனா ராணுவப் பயிற்சியை மேற்கொண்டால் அது இந்த வட்டாரத்தின் அமைதியையும் நிலைத்தன்மையையும் சீர்குலைக்கும் முயற்சிகளை அப்பட்டமாகத் தூண்டும் நடவடிக்கையாக இருக்கும்,” என்று தைவான் அதிபர் அலுவலகம் புதன்கிழமை ( 27) கூறியிருந்தது.