ஐபிஎல் மெகா ஏலத்தில் சாதித்த 11 தமிழர்கள்.. முழு விவரம்
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு வீரர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த சீசனை காட்டிலும் இம்முறை குறைவான வீரர்களுக்கே வாய்ப்பு கிடைத்திருந்தாலும், இம்முறை பல்வேறு அணிகளுக்காக விளையாடவுள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த மெகா ஏலத்தில் 62 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 182 வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர். இதற்காக ரூ.639.15 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 11 வீரர்கள் பல்வேறு அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக தமிழ்நாடு அணியின் வருண் சக்கரவர்த்தி கேகேஆர் அணிக்காக ரூ.12 கோடிக்கும், குஜராத் அணிக்காக சாய் சுதர்சன் ரூ.11 கோடிக்கும், ஷாரூக் கான் ரூ.4 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் ரூ. 9.75 கோடிக்கு வாங்கப்பட்டனர்.
அதேபோல் ஐதராபாத் அணிக்காக ஆடி வந்த நடராஜன் இம்முறை டெல்லி அணிக்காக ரூ.10.75 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி அணியின் பயிற்சியாளராக ஹேமங் பதானி பொறுப்பேற்ற நிலையில், நடராஜனை வாங்குவதில் அவர் பிடிவாதமாக இருந்துள்ளார்.
அதேபோல் குஜராத் அணிக்காக ஆடி வந்த விஜய் சங்கர் இம்முறை சிஎஸ்கே அணிக்காக ரூ.1.2 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் நட்சத்திர வீரர் வாஷிங்டன் சுந்தர் ரூ.3.20 கோடிக்கு குஜராத் அணியாலும், சாய் கிஷோர் ரூ.2 கோடிக்கு குஜராத் அணியாலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலமாக 4 தமிழ்நாடு வீரர்கள் குஜராத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் கடந்த ஆண்டை தொடர்ந்து இந்த சீசனிலும் லக்னோ அணிக்காக ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானாவை பூர்வமாக கொண்ட குர்ஜப்னித் கடந்த 7 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து விளையாடி வருகிறார்.
அண்மையில் தமிழக ரஞ்சி அணிக்காக அறிமுகமான குர்ஜப்னித் சிங் ரூ.2.20 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டார்.
இறுதியாக தமிழ்நாட்டின் ஆன்ட்ரே சித்தார்த் ரூ.30 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இம்முறை தமிழக அணியின் முருகன் அஸ்வின், சோனு யாதவ், சந்தீப் வாரியர், ஹரி நிஷாந்த், ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன் பால், ஜதாவத் சுப்ரமணியம், பாபா இந்திரஜித், பாபா அபரஜித் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் ஏலத்தில் வாங்கப்படவில்லை.
அடுத்த சீசனில் இன்னும் அதிகளவில் தமிழக வீரர்கள் ஏலத்தில் ஒப்பந்தத்தை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.