பங்களாதேஷில் பிரபல இந்து மத தலைவர் கைது – பிணை வழங்க மறுப்பு
பங்களாதேஷில் தேசத்துரோக குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல இந்து மத தலைவரும் சிறுபான்மையின தலைவருமான சின்மயி கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரிக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் சம்மிலிதா சனாதானி ஜோட் அமைப்பின் தலைவர் டாக்கா விமான நிலைய வளாகத்தில் இருந்து கைது செய்யப்பட்டார்.
மேலும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் நாட்டில் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவலைக் கேட்டதும், திரண்டிருந்த ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர், ஆனால் பிணை வழங்கப்படவில்லை.
கைது நடவடிக்கைக்கு எதிராக டாக்கா, சிட்டகாங், குமில்லா, குல்னா, தினாஜ்பூர், காக்ஸ் பஜார் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
தாஸை விடுவிக்கக் கோரி சிட்டகாங்கில் நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர். இந்த கைது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.