போர் விமானங்களுக்குப் பதிலாக ட்ரோன்களை பயன்படுத்த எலான் மஸ்க் அழைப்பு
நவீன போர் விமானங்களுக்குப் பதிலாக ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துமாறு எலோன் மஸ்க், அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தின் செலவினத்தைக் குறைக்கும் பொறுப்பை அந்நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
“விமானிகளுடனான போர் விமானங்கள் வழக்கற்றுப்போய்விட்டன. மேலும், அவற்றைப் பயன்படுத்தினால் விமானிகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது,” என்று ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் தளம் ஆகியவற்றின் தலைவரான மஸ்க் தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
அமெரிக்காவை மையமாகக் கொண்ட லாக்ஹெட் மார்ட்டினால் உற்பத்தி செய்யப்படும் எஃப்-35 ரக போர் விமானங்களை மஸ்க் கடுமையாக விமர்சித்தார்.
எஃப்-35 ரக போர் விமானங்கள் 2015ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட. இந்தப் போர் விமானங்களை ஜெர்மனி, போலந்து, ஃபின்லாந்து, ருமேனியா ஆகிய நாடுகள் அண்மையில் கொள்முதல் செய்தன.
எலான் மஸ்க்கின் கருத்துகளுக்கு சுவிட்சர்லாந்து கூட்டரசு தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரான மௌரோ கில்லி எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளார்.
“மென்பொருள், மின்னணுவியல் காரணமாக எஃப்-35 ரக போர் விமானங்களின் விலை அதிகமாக உள்ளது. விமானிகள் அவற்றை ஓட்டுவதால் அல்ல. மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஆளில்லா வானூர்திகளை உற்பத்தி செய்ய எஃப்-35 ரக போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் அதே மின்னணுவியலை அவற்றுக்கும் பயன்படுத்த வேண்டும்,” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
எஃப்-35 ரக போர் விமானங்களை அமெரிக்கா வைத்திருப்பதால் அதற்குப் போட்டியாக இருக்கும் மற்ற நாடுகளும் அவற்றின் சொந்த போர் விமானங்களை உற்பத்தி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதைத் கில்லி சுட்டினார்.இதற்காக நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்