எதிர்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக பகிரங்க மன்னிப்பு கோரிய வைத்தியர் அர்ச்சுனா!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹனதீரவிடம் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
பத்தாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசைமுகப்படுத்தல் செயலமர்வு நேற்று இடம்பெற்றது.
இந்த செயலமர்வின் இடைநடுவே அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
தான் தெரிந்து அந்த ஆசனத்தில் அமரவில்லை. அது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனமென தனக்குத் தெரியாது. அந்த ஆசனத்தில் அமருவதால் சிக்கல் ஏற்படுமென்றும் நான் அறிந்திருக்கவில்லை.
அது துரதிஷ்டவசமாக இடம்பெற்ற ஒரு நிகழ்வாகும். அதற்காகத் தான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன் என தமது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்..
கடந்த 21 ஆம் திகதி கூடிய 10வது நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்த்திருந்தார்.
இதன்போது நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வேறு ஆசனமொன்றில் அமருமாறும் அந்த ஆசனம் எதிர்க்கட்சி தலைவருக்கு ஒதுக்கப்பட்டதெனவும் கூறியிருந்தனர்.
அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மறுப்பு தெரிவித்திருந்ததுடன் அது தொடர்பான காணொளியை தமது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.