ஜோர்தானில் இஸ்ரேலியத் தூதரகத்துக்கு அருகில் துப்பாக்கிச்சூடு – துப்பாக்கிதாரி கொலை !
ஜோர்தானில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்துக்கு அருகில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததாக அந்நாட்டு ஊடகம் நவம்பர் 24ஆம் திகதியன்று தெரிவித்தது.துப்பாக்கிக்காரர் கொல்லப்பட்டதாகவும் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தலைநகர் அம்மானில் உள்ள ராபியா பகுதியில் சுற்றுக்காவல் மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகளை நோக்கி நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.துப்பாக்கிச் சத்தம் கேட்டதை அடுத்து, அப்பகுதியைச் சுற்றி ஜோர்தானியக் காவல்துறை அதிகாரிகள் தடுப்பு போட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேலியத் தூதரகம் இருக்கும் ராபியா பகுதிக்கு காவல்துறை அதிகாரிகளும் ஆம்புலன்ஸ் வண்டிகளும் விரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.இஸ்ரேலுக்கு எதிராக ராபியா பகுதியில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடப்பது வழக்கம்.
இஸ்ரேலுக்கு எதிரான மிகப் பெரிய, ஆனால் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் அங்கு நடத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், அங்கே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக ஜோர்தானியக் காவல்துறை தெரிவித்தது.
தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.அதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்கள் வீட்டிலேயே இருக்கும்படி ராபிய பகுதி குடியிருப்பாளர்களை ஜோர்தானியக் காவல்துறை கேட்டுக்கொண்டது.
ஜோர்தானின் மக்கள்தொகை 12 மில்லியன்.அவர்களில் பலர் பாலஸ்தீனர்கள்.
1948ஆம் ஆண்டில் இஸ்ரேல் எனும் நாடு உருவானபோது அதை எதிர்த்த பாலஸ்தீனர்கள் பலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.சிலர் ஜோர்தானுக்கு நாடு கடத்தப்பட்டனர்.வேறு சிலர் ஜோர்தானுக்குத் தப்பி ஓடினர்.
ஜோர்தானில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு பாலஸ்தீனத்தில் உறவினர்கள் உள்ளனர்.பல ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலுடன் ஜோர்தான் கையெழுத்திட்ட அமைதி உடன்படிக்கை ஜோர்தானின் உள்ள பல பாலஸ்தீனர்களை அதிருப்தி அடையச் செய்தது.இன்று வரை அதுகுறித்து அவர்களில் பலர் கோபக் குரல் எழுப்புகின்றனர்.