மன்னர் சார்லஸ் எதிர்ப்பு: ஆஸ்திரேலிய செனட் பழங்குடி உறுப்பினர் மீது கண்டனம்
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்சை அவமதித்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மன்னர் சார்ல்ஸ் கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பராவுக்குப் பயணம் மேற்கொண்டார். நாடாளுமன்றத்தில் ஐரோப்பியக் குடியிருப்பின் மரபுடைமையை பற்றி மன்னர் சார்ல்ஸ் பேசியபோது, அவரைக் குறுக்கிட்டு அவமதித்தார், நாடாளுமன்ற உறுப்பினர் லிடியா தோர்ப்.
அந்தக் கண்டனத்திற்கு எந்தவொரு தண்டனையும் கிடையாது. இருப்பினும், 46 பேர் அதற்கு ஆதரவாகவும், 12 பேர் அதற்கு எதிராகவும் வாக்களித்தனர்.
மன்னர் சார்ல்ஸ் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது, “இது உங்கள் நிலமல்ல, நீங்கள் எனது மன்னரல்ல,” என்று சுயேட்சை செனட்டரான லிடியா தோர்ப் உரத்தக் குரலில் கத்தினார். ஐரோப்பியக் குடியேறிகள் பழங்குடி ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக ‘இனப்பேரழிவில்’ ஈடுபட்டதாக அவர் குறைகூறினார்.
தேசிய கீதத்திற்காக பிரமுகர்கள் எழுந்து நின்றபோது, அவர் மன்னரிடமிருந்து திரும்பி நின்றதாகத் தெரிவிக்கப்பட்டது.தோர்ப்பின் செயல்கள் அவமரியாதையானவை என்றும் இடையூறு விளைப்பவை என்றும் குறைகூறப்பட்டது.
அவர் எந்தவொரு பேராளர் குழுவிலும் உறுப்பினராக இருப்பது சரியானது அல்ல என்று செனட் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“என் மன்னர் அல்ல” என்ற வார்த்தையைக் கொண்ட தங்கச் சங்கிலியை கழுத்தில் அணிந்திருந்த தோர்ப், கண்டனம் குறித்து தமக்கு கவலை இல்லை என்று கூறினார்.
பிரிட்டிஷ் மன்னர் மீண்டும் திரும்பினால், தாம் மீண்டும் அவ்வாறு செய்யப்போவதாக அவர் ‘ஏபிசி’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.“இந்த நாட்டில் காலனித்துவத்தை நான் எதிர்ப்பேன்,” என்றார் அவர்.