இலங்கை – பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள செய்தி!
தேர்தல் முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்குள் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு அறிக்கையை தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு.சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (16) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காலக்கெடு முடிந்த பிறகும் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு செலவு அறிக்கை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக ஏற்கனவே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதே போன்று பொதுத் தேர்தலில் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்களை விரைவில் வழங்குமாறு கட்சியின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சுதந்திரமான மற்றும் அமைதியான தேர்தல் இருந்தபோதிலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.