தாய்லாந்தில் நாய்களைத் தத்தெடுத்து அவற்றை கொன்று தின்ற நபர்!
தாய்லாந்தின் சியாங் ராய் மாநிலத்தில் விலங்குகளைத் துன்புறுத்தும் சம்பவம் ஒன்றால், பிராணிப் பிரியர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
நாய்களுக்கு அன்பான இல்லத்தைக் கொடுக்கப்போவதாகக் கூறி, நபர் ஒருவர் அவற்றைத் தத்தெடுத்து, பின்னர் அவற்றைக் கொடூரமாக வெட்டிச் சாப்பிட்டதாக தாய்லாந்துக் கண்காணிப்பு அறநிறுவனம் தெரிவித்துள்ளது.அந்த இளம் நபர், ‘சுஷி’ என்ற நாயைத் தத்தெடுத்தபோது அவரின் செயல் வெளிச்சத்துக்கு வந்தது.
‘அச்சே வூயி’ என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர், அந்நாய்க்கு அன்பான இல்லத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, அதனைத் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார். ‘சுஷி’யைப் போலவே , பேர், லக்கி, சூமோ ஆகிய நாய்களும் அதே கொடுமையை அனுபவித்தன.
அச்சம்பவங்கள் குறித்து தகவல் பெற்ற அந்த அறநிறுவனம், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து அதன் தொடர்பில் விசாரணை நடத்தியது.
‘மே சான்’ மாவட்டக் காவல்துறையினர் அச்சேயை விசாரித்தபோது, அவர் நாய்களைக் கொன்று தின்ற குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவரின் செயல்களால், பலரும் கடும் சினமடைந்துள்ளனர். தாய்லாந்தில் மேலும் கடுமையான விலங்குநலச் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்துச் சட்டத்தின்கீழ், விலங்குத் துன்புறுத்தலுக்காக வூயி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஈராண்டுவரை சிறைத் தண்டனையும் 40,000 பாட் (S$1,540) வரை அபராதமும் விதிக்கப்படலாம்.