தேசிய மக்கள் சக்தியை வடநாட்டினர் ஆதரிப்பது முதல் தடவை – வஜிர அபேவர்தன
தென்னிலங்கையில் இருந்து வந்த ஒரு கட்சி மீது வடக்கில் மக்கள் முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கையை முதல் தடவையாகக் காட்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
நாட்டின் தேர்தல் வரலாற்றில் இது மிகவும் சிறப்பானதொரு சந்தர்ப்பமாகும்.வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு சக்திகளுடன் செயற்பட்டாலும் வடக்கில் உள்ள மக்கள் தெற்கில் உள்ள அரசியல் கட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
வடக்கில் உள்ள மக்களின் பிரதிநிதிகள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்பதன் மூலம் சுறுசுறுப்பாக ஆட்சியில் இணைந்து கொள்வார்கள் இது நல்ல அறிகுறியாகும் என்றார்.
இலங்கைக்கு கிடைத்த வெற்றி. இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.
சுதந்திரத்தின் பின்னர் பல்வேறு தமிழ் தலைவர்கள் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், அவர்கள் தமது சொந்த கட்சிகளிலிருந்தே தெரிவு செய்யப்பட்டதாக அபேவர்தன தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் இருந்த போதும் அவர் தென்னிலங்கையில் இருந்து ஒரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.
“போட்டியிடும் போது நாம் இரண்டு விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். ஒன்று, நாட்டு மக்கள் பெரும்பாலும் வாக்களிப்பதைத் தவிர்த்துவிட்டனர். பெரும்பான்மையானவர்கள் முக்கியமாக தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். சில காரணிகள் குறித்து அவர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கலாம். அத்துடன் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. அதற்காக அவர்களைப் பாராட்டுகிறோம். மேலும் இது இலங்கைக்கு ஒரு சிறப்பான சந்தர்ப்பமாகும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போதைய ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கம் பல மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். “இப்போது அதைச் செய்ய முடியாது என்று அவர்களால் கூற முடியாது. இந்த நிமிடத்தில் இருந்து, 22 மில்லியன் மக்களின் நன்மைக்காக அந்த சக்திவாய்ந்த ஆயுதத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தற்போதைய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சவாலாக உள்ளது” என தெரிவித்தார்.