முழு ஃபிட்னஸ் உடன் கம்பேக் கொடுத்த முகமது ஷமி
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி முழு ஃபிட்னஸ் உடன் கம்பேக் கொடுத்துள்ள நிலையில், அவரை ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்குவதற்கு மிகப்பெரிய போட்டி இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 360 நாட்களுக்கு பின் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளார்.
ரஞ்சி டிராபி தொடரில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் கம்பேக் கொடுத்துள்ள முகமது ஷமி, முதல் இன்னிங்ஸிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதனால் விரைவில் இந்திய அணியில் முகமது ஷமி இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இன்னும் 10 நாட்களில் ஐபிஎல் மெகா ஏலம் நடக்கவுள்ளது. குஜராத் அணிக்காக விளையாடி வந்த முகமது ஷமி, ரீடெய்ன் செய்யப்படாமல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு அவரின் காயமே காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த சீசனில் காயம் காரணமாக முகமது ஷமி விளையாடவில்லை.
ஆனால் முதல் 2 சீசன்களிலும் முகமது ஷமி அசாத்திய செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்பதோடு, பவர் பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தக் கூடியவர் என்பதால், அவர் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்திற்கு செல்வார் என்று கூறப்பட்டு வருகிறது.
அதில் 3 அணிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளன. அதில் முதல் அணியாக சிஎஸ்கே அணியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
கடந்த சீசனிலேயே சிஎஸ்கே அணி குஜராத் அணியிடம் இருந்து முகமது ஷமி டிரேட் செய்ய விண்ணப்பித்தது. அதனை குஜராத் அணி ஏற்கவில்லை.
இதனால் முகமது ஷமியை அதிக தொகை கொடுத்து வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் தயாராகவே இருக்கும். அதேபோல் கடந்த மெகா ஏலத்தில் தீபக் சஹருக்கு எப்படி ரூ.14 கோடி வரை கொடுத்ததோ, இம்முறை முகமது ஷமிக்கும் அந்த அளவிற்கான தொகை கொடுக்க வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து 2வது இடத்தில் கேகேஆர் அணி நிர்வாகம் உள்ளது. அந்த அணியின் ஸ்பின்னர்கள் இருக்கும் சூழலில், ஹர்சித் ராணா மட்டுமே ஒரேயொரு வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார்.
இதனால் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை வாங்க கேகேஆர் அணி திட்டமிட்டு வருகிறது. அதேபோல் டெல்லி அணியும் முகமது ஷமி மீது கண் வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
டெல்லி அணியிலும் 2 ஸ்பின்னர்கள் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ள நிலையில், முகேஷ் குமார், கலீல் அஹ்மத் உள்ளிட்டோரை ஆர்டிஎம் செய்யும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் அவர்களை விடவும் முகமது ஷமி போன்ற ஒரு வேகப்பந்துவீச்சாளர் வாங்கினால், டெல்லி அணியின் பவுலிங் அட்டாக்கை அவரை சுற்றி கட்டமைக்க முடியும்.
இதனால் குறைந்தபட்சம் முகமது ஷமி ரூ.12 கோடி வரை ஏலத்தில் வாங்கப்படுவார் என்று கூறப்படுகிறது.