சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: மருத்துவர் மீது 7முறை கத்திக்குத்து தாக்குதல்
சென்னை கிண்டியில் கலைஞர் அரசு மருத்துவமனையில், புற்றுநோய் துறையில் பாலாஜி ஜெகன்நாதன் என்பவர் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் உள்பட 4 பேர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார். மருத்துவர் பாலாஜி இதய நோயாளி என்பதால், 8 மணி நேரத்திற்கு பிறகு அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மருத்துவர் பாலாஜியை தாக்கிய விக்னேஷ அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விக்னேஷ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக, தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட சென்னை கமிஷனர் அருண் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.