காருக்கு இறுதிச் சடங்கு நடத்திய குஜராத் குடும்பம்: 1,500 பேர் பங்கேற்பு
குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் ஒரு காருக்கு தனித்துவமாகவும் உணர்ச்சிகரமாகவும் விடைபெற்றது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1,500 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், 12 வயதான வேகன் ஆர் (Wagon R) என்ற “அதிர்ஷ்ட காருக்கான” இறுதிச் சடங்குகளை குஜராத்தி குடும்பம் ஒன்று சமீபத்தில் நடத்தியது.
விழாவில் 15 அடி ஆழமான குழிக்குள் , சடங்குகளுடன் வாகனம் வைக்கப்பட்டது.
காரின் மேல் சாமந்தி மலர் மாலைகள் மற்றும் ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்ட வேகன் ஆர் குழிக்குள் இறக்கப்பட்டது.
காரின் உரிமையாளரான சஞ்சய் போலரா , இந்த வாகனம் தனது குடும்பத்திற்கு பல ஆண்டுகளாக செழிப்பையும் மரியாதையையும் கொண்டு வந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டார்.
“நான் இந்த காரை ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினேன், அது குடும்பத்திற்கு செழிப்பைக் கொண்டு வந்தது. தொழிலில் வெற்றி கண்டது மட்டுமின்றி எனது குடும்பத்துக்கும் மரியாதை கிடைத்தது. அந்த வாகனம் எனக்கும் எனது குடும்பத்துக்கும் அதிர்ஷ்டமாக அமைந்தது. எனவே, அதை விற்பதற்குப் பதிலாக, எனது பண்ணையில் ஒரு சமாதியைக் காணிக்கையாகக் கொடுத்தேன்,” என்று பொலரா கூறினார்.
எதிர்கால சந்ததியினருக்கு காரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு மரத்தை நடவிருப்பதாக பொலரா பகிர்ந்து கொண்டார். குடும்பத்தின் “அதிர்ஷ்ட கார்” அதன் அடியில் உள்ளது என்பதை நினைவூட்டுவதாக மரம் நிற்கும்.
விழாவிற்கான தயாரிப்பில், பொலரா தனது கிராமத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேருக்கு நான்கு பக்க அழைப்பிதழை அனுப்பினார். அழைப்பிதழில், “இந்த கார் 2006 முதல் ஒரு குடும்ப உறுப்பினரைப் போல் உள்ளது, மேலும் இது எங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தந்தது. நாங்கள் செழிப்பைப் பெற்றோம், சமூகத்தில் எங்கள் நற்பெயர் உயர்ந்தது. இந்த கார் என்றென்றும் எங்கள் நினைவில் இருக்க வேண்டும், அதனால்தான் இந்த காரை சமாதி (புதைக்க) திட்டமிட்டுள்ளோம்,” என TOI தெரிவித்துள்ளது.
வீடியோ வைரலானதால், நெட்டிசன்கள் அதில் உள்ள நகைச்சுவையைப் பார்த்து தங்கள் எதிர்வினைகளைப் பகிர்ந்து கொண்டனர். ஒரு நபர் எழுதினார், “தொல்லியல் ஆய்வு 3024 ஆம் ஆண்டில் வேகன்ரை அகழும்.” மற்றொரு பயனர், “எதிர்காலத்தில் மக்கள் இதைப் பார்க்கப் போகிறார்கள்” என்று கேலி செய்தார். மூன்றாவது பயனர் எழுதினார், “இது இந்தியாவில் மட்டுமே நடக்கும்.” என்று இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.