வெளிநாட்டு மாணவர்களுக்கான விரைவு விசா திட்டத்தை கைவிடும் கனடா
வெளிநாட்டு மாணவர்கள், கனடா சென்று கல்வி பயில்வதற்காக அனுமதி பெறுவதைத் துரிதப்படுத்தும் நடைமுறையை அந்நாடு உடனடியாகக் கைவிடுகிறது என்று எக்கனாமிக் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நேரடி மாணவர் சேர்க்கைத் திட்டம் என்றழைக்கப்படும் அது, இதுவரை பல அனைத்துலக மாணவர்கள், கல்விக்கான விசாவை எளிதில் பெற வழிவகுத்து வந்துள்ளது.
இதற்கிடையே, இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து வெளிநாட்டவர் பலர் கனடாவுக்குப் போகக்கூடிய சாத்தியம் எழுந்துள்ளது. அதைக் கருத்தில்கொண்டு கனடிய அதிகாரிகள் விழிப்புடன் இருக்கின்றனர் என்று எஸ்சிஎம்பி (SCMP) போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க வரலாற்றில் ஆக அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டவரைத் துரத்தப்போவதாக அந்நாட்டின் அதிபராக மீண்டும் பொறுப்பேற்கவிருக்கும் டிரம்ப் உறுதியளித்திருப்பதைத் தொடர்ந்து இந்நிலை உருவாகியுள்ளது.டிரம்ப்பின் முதல் தவணைக் காலமான 2017லிருந்து 2021ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், பல வெளிநாட்டவர் வடக்கே கனடாவுக்குத் தப்பியோடினர்.