AUSvsPAK – பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலைடில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 35 ரன்களை அடித்தார்.
மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 35 ஓவர்களில் 163 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரௌஃப் ஐந்து விக்கெட்டுகளையும், ஷாகீன் ஷா அப்ரிடி மூன்று விக்கெட்டுகளையும், நசீம் ஷா மற்றும் முகமது ஹஸ்னைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான சயிம் ஆயுப் மற்றும் அப்துல்லா ஷஃபிக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சயிம் ஆயுப் 82 ரன்களில் ஆட்டமிழக்க இவருடன் களமிறங்கிய அப்துல்லா 64 ரன்களை எடுத்தார். பாபர் அசாம் 15 ரன்களை அடிக்க பாகிஸ்தான் அணி 26.3 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 169 ரன்களை எடுத்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் சமன் செய்துள்ளது.