சவுதி அரேபிய பாலைவனம் ஒன்றில் முதல் முறையாக பனிப்பொழிவு
வரலாற்றில் இதற்குமுன் கண்டிராத வகையில், சவூதி அரேபியப் பாலைவனம் ஒன்றில் முதன்முதலாக பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது.
கடும் மழையையும் ஆலங்கட்டி மழையையும் தொடர்ந்து, இந்த எதிர்பாரா அதிசய நிகழ்வு இடம்பெற்றுள்ளது அவ்வட்டாரவாசிகளையும் வானிலை வல்லுநர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.
அல் ஜாவஃப் வட்டாரவாசிகள் காலையில் கண்விழித்துப் பார்த்தபோது, மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் பனிபோர்த்தி இருந்ததைக் கண்டு வியந்துபோயினர்.
இதனால், பருவகால மலர்களும் நறுமணச் செடிகளும் பூத்துக் குலுங்க, அடுத்துவரும் வசந்த காலம் வனப்புமிக்கதாக இருக்கும் என்பது உள்ளூர் அதிகாரிகளின் எதிர்பார்ப்பு.
அதே நேரத்தில், மாறிவரும் இத்தகைய சூழல்களால், வரும் நாள்களில் வானிலை மோசமானதாக இருக்கலாம் என்று சவூதி வானிலைத் துறை எச்சரித்துள்ளது. இடி மின்னல், கனமழை, ஆலங்கட்டி மழை, பெருங்காற்று ஆகியவை அவ்வட்டாரத்தில் தொடரலாம் என்றும் அதனால் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கத்திற்கு மாறான இவ்வானிலையால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சவூதி மட்டுமின்றி, அதன் அண்டை நாடான ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலும் (யுஏஇ) இத்தகைய வழக்கத்திற்கு மாறான வானிலையை எதிர்கொண்டு வருகிறது.