மலேசியாவில் 866 கைதிகளுக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட மரண தண்டனை
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 14ஆம் திகதி நிலவரப்படி, மலேசியாவில் மொத்தம் 866 கைதிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.இத்தகவலை மலேசியாவின் பிரதமர் அலுவலக அமைச்சர் அஸலினா ஓத்மான் தெரிவித்தார்.
இக்கைதிகளில் 52 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்ததாக அவர் கூறினார்.தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது என அமைச்சர் அஸலினா தெரிவித்தார்.
மரண தண்டனை மறுஆய்வு மற்றும் ஆயுள் தண்டனை சட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்ததை அடுத்து, ஏனைய 814 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டதாக அமைச்சர் அஸலினா நவம்பர் 6ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக விளக்கமளித்தார்.
இவ்வாண்டு ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து அக்டோபர் மாதம் 14ஆம் திகதி வரை 12 பேருக்கு மலேசிய உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததாக அவர் கூறினார்.
அதே காலகட்டத்தில் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்ததாக அவர் தெரிவித்தார்.