இந்தியாவில் ராஜஸ்தான் தேசியப் பூங்காவில் இருந்த 25 புலிகள் மாயம்!
ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூர் தேசியப் பூங்காவின் புலிகள் காப்பகத்தில் 75 புலிகள் இருந்தன. அவற்றில் 25 புலிகளைக் காணவில்லை என்று வனவிலங்குக் காப்பாளர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
வாரத்திற்கு ஒரு முறை கண்காணிப்புப் படக்கருவி மூலம் புலிகள் நடமாட்டத்தை உறுதி செய்யும்போது, 25 புலிகள் காணவில்லை என்பது தெரியவந்ததாக பவன் குமார் தெரிவித்துள்ளார். இதேபோல் 2022ஆம் ஆண்டில் 13 புலிகளைக் காணவில்லை என்று அந்தப் புலிகள் காப்பகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பூங்காவில் இருந்த 75 புலிகளில் மூன்றில் ஒரு பங்கான 25 புலிகள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ராஜஸ்தான் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல்போன அந்தப் புலிகள் பூங்காவில் இருந்து தப்பி ஓடிவிட்டனவா, அவற்றால் அப்பகுதி மக்கள் ஆபத்தை எதிர்நோக்குகின்றனரா என்பது குறித்து விசாரிக்க மாநில அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழு, காணாமல்போன புலிகளைப் பற்றி விசாரணை மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
எனினும், ரந்தம்பூர் பூங்காவில் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அவற்றைக் கண்காணிப்பதில் சிரமத்தை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.