பிணைக் கைதிகளை உயிரோடு விடுவிக்க வேண்டும்: இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்
இஸ்ரேலின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான யோவ் கேலண்ட், பிணைக்கைதிகள் உயிருடன் இருக்கும்போதே விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.தகுந்த வயதுடைய அனைத்து இஸ்ரேலியர்களும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, ஹமாஸுக்கு எதிரான காஸா போரில் கேலண்ட் மீதிருந்த நம்பிக்கையை இழந்ததால் அவரை நவம்பர் 5ஆம் திகதி பதவியிலிருந்து நீக்கினார்.
2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது அதிரடித் தாக்குதலை நடத்திய பாலஸ்தீனிய போராளிக் குழுக்களுக்கு எதிராக இஸ்ரேலிய ராணுவம் பதிலடித் தருவதில் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்துள்ளது.
முன்னாள் ஜெனரலான கேலண்ட் காசாவில் ஹமாஸுக்கு எதிரான போரை வடிவமைத்தவர். ஆனால் இஸ்ரேலியப் போரின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் நெட்டன்யாகுவின் ஆதரவை அவர் இழந்தார்.
பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிறகும் 65 வயதான கேலண்ட், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்ய தொடர்ந்து பணியாற்றப் போவதாக சூளுரைத்தார்.“இது, என்னுடைய வாழ்க்கையின் ஓர் அங்கம்,” என்று எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.“ஹமாஸால் கடத்தப்பட்ட எங்கள் மகன்களையும் மகள்களையும் திரும்பக் கொண்டுவர இஸ்ரேலுக்கு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது,” என்றார் அவர்.
“பிணைக் கைதிகளை மீட்டுக்கொண்டு வருவது சாத்தியம். ஆனால் அது வலியை ஏற்படுத்தும் பல்வேறு சமரசங்களை உள்ளடக்கியது. இந்த சமரசங்களை எப்படித் தாக்குப்பிடிப்பது என்பது இஸ்ரேலிய அரசாங்கத்துக்குத் தெரியும். அவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பதை ராணுவமும் அறிந்துள்ளது,” என்று கேலண்ட் கூறினார்.
ஓராண்டிற்கும் மேலாக நடந்த சண்டையில் வீரர்கள் சோர்வடைந்து விட்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ள வேளையில், இஸ்ரேலிய ராணுவச் சேவை பிரச்சினைகளை அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.“அனைவரும் ராணுவத்துக்கு சேவையாற்ற வேண்டும். இஸ்ரேலைப் பாதுகாக்கும் பணியில் ஒன்றாக ஈடுபட வேண்டும்,” என்று கேலண்ட் மேலும் தெரிவித்தார்.