சிங்கப்பூரில் கணினி மென்பொருள் மூலம் வங்கி மோசடி – பணத்தை இழந்த மக்கள்
சிங்கப்பூரில் கணினி மென்பொருளின் (malware) மூலமாக ஒரு கும்பல் வங்கி மோசடிகள் புரிந்துள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த மோசடிகளில் சுமார் 8 மில்லியன் வெள்ளி பறிபோனதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவற்றுக்குத் துணைபுரிந்ததாக நம்பப்படும் ஆறு பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஆபத்தான கணினி மென்பொருளைக் கொண்டு வங்கிக் கணக்குகள் ஊடுருவப்பட்டது குறித்துப் பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் 2023ஆம் ஆண்டு ஜூன் 13ஆம், 14ஆம் திகதிகளில் நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளின்போது 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் புதிய வங்கிக் கணக்குகளைத் திறந்து பின்னர் அவற்றை மோசடிக் கும்பலின் பயன்பாட்டிற்குக் கொடுத்தனர். மேலும், வங்கிக் கணக்குகளிலிருந்துப் பணம் எடுக்கவும் வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணம் மாற்றவும் உதவினர்.
மோசடிக் கும்பலில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க முயன்ற மற்றுமொரு நபர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 500,000 வெள்ளி வரை அபராதம், பத்தாண்டு வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பொதுமக்கள் எந்தச் சூழலிலும் தங்களது SingPass கணக்கையும் வங்கிக் கணக்கு விவரங்களையும் கைத்தொலைபேசி எண்ணையும் மற்றவர்களின் பயன்பாட்டிற்குக் கொடுக்கக்கூடாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய மென்பொருளைப் பயன்படுத்தவேண்டாம் என்றும் அது நினைவூட்டியது.