அவுஸ்திரேலியா குடியரசாகவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது!
மூன்றாவது சார்ல்ஸ் மன்னர் முடிசூட்டிக்கொண்டுள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலியா குடியரசாகவேண்டும் என்ற வேண்டுகோள்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
மன்னர் சார்ல்ஸிற்கு விசுவாசமாயிருப்பேன் என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்ட இறுதி அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிசாகத்தான் இருக்கவேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக அவுஸ்திரேலியாவின் குடியரசு இயக்கத்தின் தலைவர் கிரெயக்பொஸ்டர் தெரிவித்துள்ளார்.
எங்கள் தலைவர்கள் எங்களை பிரதிநிதித்துவம் செய்யவேண்டும் அவர்கள் எங்களிற்கு விசுவாசமாகயிருப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா குடியரசானால் நாட்டின் தலைவர் என்ற பதவியிலிருந்து மன்னர் சார்ல்ஸ் அகற்றப்படுவார் ஆனால் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் பொதுநலவாயத்தில் நீடிக்கும்.
எனினும் இது இடம்பெறுவதற்கு அரசமைப்பு மாற்றத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பு அவசியம். அதன் பின்னர் நாட்டின் தலைவரை தெரிவு செய்ய மீண்டும் வாக்கெடுப்பு இடம்பெறும்.
கடந்த செப்டம்பரில் இரண்டாம் எலிசபெத் மகாராணி உயிரிழந்ததை தொடர்ந்து அவுஸ்திரேலியா குடியரசாக வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.